வர்மக்கலை (The art of Varmam)
- Oovia Elangovan

- Aug 14
- 2 min read
Updated: Aug 19
வர்மக் கலையின் கூறுகள் உலகம் எங்கும் வெவ்வேறு பெயர்களில் காணப்படுகின்றன. ஆனால், அவற்றின் வேர் தமிழகத்தில், குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளன.
வர்மம் என்றால் என்ன?
உடலுள் உயிர் செம்மையாக இயங்குவதற்கு உறுதுணையாக இருக்கும் நுட்பமான ஆற்றல் வற்மமாகும். உடலுள் இயங்குகிற காற்றோட்டம், வெப்பவோட்டம், இரத்தவோட்டம் ஆகிய மூன்று ஓட்டங்களையும் ஒழுங்கு செய்து உடலுக்கு நோய் வராமல் பாதுகாக்கின்றது. பதஞ்சலி முனிவர் இதை “பிராண சக்தி” எனவும் திருமூலர் “வேதசத்தி” எனவும் அழைத்துள்ளனர். இந்த ஆற்றல் காற்றைவிடவும் நுட்பமான தன்மை கொண்டது.
மிகநுட்பமான தன்மையை உடைய வற்ம ஆற்றல் உடலில் தங்கி இருக்கின்ற இடங்களை வற்மப் புள்ளிகள் அல்லது வற்ம இடங்கள் எனக் கூறுவர். இவ்வற்மப் புள்ளிகள் உடலில் நாடிகள், நரம்புகள், இரத்தக் குழாய்கள், எலும்பு சந்திகள், தசை சந்திகள் என்று உடல் முழுமையும் பரவி உள்ளன.

உடலில் மொத்தம் எட்டாயிரம் வர்மப் புள்ளிகள் இருப்பதாக வர்ம வில்விசை குறிப்பிடுகின்றது. கும்பமுனி நரம்பறை என்னும் நூல் பட்டியலிட்டு 251 வர்மங்கள் எனக் கூறுகின்றது. ஆனால் 108 வர்மப் புள்ளிகள்தாம் வர்மக் கலைக்கு அடிப்படை எனப் பொதுவாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அவை:
படுவர்மம் -12 (அதிகளவு ஆற்றலை உடைய வற்மங்கள்)
தொடுவர்மம்-96 (சிறிதளவு ஆற்றலை உடைய வற்மங்கள்)
ஒரு வர்மப்புள்ளியை விரல்களால் தொட்டு இயக்கினால், அந்த வர்மம் மட்டுமே இயக்கம் பெறுமானால் அதனைத் தொடுவர்மம் எனலாம். ஒரு வர்மப்புள்ளியை இயக்கினால் அந்த வர்மப்புள்ளி தான் இயங்குவதோடு பிற வர்மப் புள்ளிகளையும் இயக்குகின்ற திறம் கொண்டிருக்குமானால் அந்த வர்மப்புள்ளியைப் படுவர்மம் எனலாம்.
வர்மங்களின் பெயர்கள்:
உடல் ஆற்றலின் பொதுப் பெயராக 'வர்மம்' என்ற சொல்லைக் கருதலாம். ஆனால் ஆற்றலைக் குறிக்க பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன. அவை.
பிராணன்
காலம்
சுவாசம்
கலை
யோகம்
என்பனவாகும். இவை மட்டும் அல்லாமல் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆற்றலைக் குறிக்கும் சொற்கள் இன்றும் வர்மக்கலையுள் கிடைக்கின்றன.
முடிச்சுகள்:

முடிச்சுகள் என்பதை வர்ம உடலியல் நோக்கில் கூறப்புகுந்தால், ஒன்றிற்கு மேற்பட்ட நரம்புகள் சந்திக்கும் இடங்களாகும். இது உடலில் பல்வேறு இடங்களில் இருந்தாலும் முதுகுத் தண்டெலும்பில் உள்ள முடிச்சுகளைப் பற்றி வர்ம நூல்கள் முக்கியமாகக் கூறுகின்றன.
அவை,
கருணாமிர்தமுடிச்சு
சரமுடிச்சு
துன்னல்முடிச்சு
பாசமுடிச்சு
கும்பக முடிச்சு, என்பனவாகும்.
பலதரப்பட்ட நோய்களுக்கு சித்த மருத்துவர்கள் இந்த வர்மக்கலையை கையாள்வார்கள். இது பெரும்பாலும் பொழுதுபோக்கு உடற்பிடிப்பு சிகிச்சைகளுடன் (recreational massage therapies/spa) தவறாக ஒப்பிடப்படுகிறது.
ஆனால், இக்கலையை பயில்வதற்கும் சிகிச்சையை மருத்துவர் அளிப்பதற்கு, பல வருடங்கள் பயிற்சியும் உடல் தத்துவத்தை பற்றின ஆழ்ந்த அறிவும் தேவை.





Comments